நாட்குறிப்புல எழுத இடம் இல்லாத காரணத்துனால வெள்ளைத்தாள்ல எழுதி வைச்சேன் இது ஒரு ரகசிய பயணமாச்சே அதுனால காகிதத்தை கிழிச்சிட்டு கைப்பேசில பதிவு செஞ்சேன்.பதிவ பகிரனும்னு நினைச்சேன் அதயும் பண்ணிட்டேன்.பேச்சுநடைல எழுதிய என்னோட தமிழ பொறுத்துக்கோங்க...
எனக்கு ஒரு ஆசை இருந்தது... யார்க்கும் தெரியாம எங்கேயாச்சும் ஓடி போகனும்னு..
மே 13ல ரயில் பயணம் செய்ய பிப்ரவரியிலேயே முன்பதிவு செஞ்சிருந்தேன்.. அந்த பயணத்தோட தேவைக்கு தடை வந்த்துனால என் ஆசைய இந்த நேரத்துல நிறைவேத்திக்கலாம்னு முடிவெடுத்தேன்...
மே 13 ,ஞாயிற்றுக்கிழமை மதியம் முகப்பேர் சித்தி வீட்டுல சிக்கன் பிரியாணி சாப்டுட்டு தூங்கிட்டு இருந்தேன்..முன்பதிவு செஞ்ச ரயில் இரவு 7.15க்கு தான் இருந்தாலும் காலம் தாழ்த்தி போக விருப்பம் இல்ல..எங்க வீட்டுல காரைக்குடி நண்பன பார்க்க தான் போறேன்னு சொல்லிருந்தேன்...அம்மா,மாமா,மாமி,சித்தி,சித்தப்பா எல்லாரும் முகப்பேர்ல தான் இருந்தாங்க...எல்லாரிடமும் நிறைய அறிவுரைகள வாங்கிட்டு மாலை 4.45 க்கு கிளம்புனேன்..மாமா என்ன கோல்டன் பிளாட்ஸ் ஸ்டாப்ல விட்டுட்டு போனாரு...அங்க இருந்து anna square bus (40A) புடிச்சு எழும்பூர்க்கு 5.30 மணிக்கெல்லாம் வந்து சேர்ந்துட்டேன்..7.15 ரயிலுக்கு 5.30 ல இருந்தே காத்திருந்தேன்..நான் போகவேண்டிய இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 6.15 மணிக்கு ஒன்பதாவது நடைமேடைல வந்து நின்னுச்சு..S3 பெட்டிய நோக்கி நடந்தேன்..உள்ள ஏறலாம்னு போனா அங்க இருந்த துப்புரவுத் தொழிலாளி ஒருத்தர் 7 மணிக்கு தான் தம்பி உள்ள fan light எல்லாம் on பண்ணுவாங்க அது வரைக்கும் வெளியவே இருங்கனு சொல்லவே நானும் என்னோட பைய அங்க இருந்த இருக்கைல வச்சிட்டு அந்த தொழிலாளி கூட பேசிட்டு இருந்தேன்..என்னோட back bag ல ஒரு வாழைப்பழமும் ஒரு தண்ணி பாட்டிலும் 3 நாட்களுக்கான உடைகளும் power bank um தான் இருந்துச்சு. சில மாதங்களா வீட்டுக்கு தெரியாம சேத்து வெச்ச மூவாயிரம் ரூபாய் பணமும் இருந்தது.என்னோட வழித்துணை நண்பனான புத்தகம் ஒன்னு கூட இல்ல..7 மணிக்கு ரயில்ல ஏறி நான் முன்பதிவு செஞ்சிருந்த upper berthல bag வச்சிட்டு கீழ உட்கார்ந்தேன்..அந்த ரயில் பெட்டில ஒரு இடத்துல கூட charging socket இல்ல..ஜன்னலோரத்துல ஒரு பெரியவர் நல்லா ஜவ்வாது மணக்க திருநீறு பூசியிருந்தாரு..எதிர்ல அவரோட மனைவி..புதுக்கோட்டை தம்பதி..சரியா 7.15 க்கு பயணம் தொடங்கிடுச்சு..மாலைல இருந்து Facebook WhatsApp பார்த்துட்டு இருந்ததுனால mobileல charge இறங்கிடுச்சசு..power bankல charge போட்டுட்டு கொஞ்ச நேரம் படியில நின்னுட்டு இருந்தேன்..தாம்பரம்ல ஒரு குடும்பம் ஏறுனாங்க..நான் இருந்த bayல அவங்களுக்கு 2 middle berth 1 upper berth அவங்க மொத்தம் அஞ்சு பேரு...அந்த ராம்நாடு குடும்பமும் புதுக்கோட்டை தம்பதியும் இட்லி சாப்பிட்டாங்க நான் எடுத்துட்டு வந்த வாழைப்பழத்த சாப்டு என்னோட dinnerஅ முடிச்சிகிட்டேன்..மனிதநேயம் செத்துடுச்சுனு யாருங்க சொன்னா?..நான் சாபிடாம இருந்தத பார்த்துட்டு அவங்க கொண்டு வந்த உணவ எனக்கு பரிவோடு கொடுத்தாங்க..இருந்தாலும் நான் எதுவும் சாபிடல..
இரவு பயணத்துல சில முக்கியமான ரயில் நிலையத்த எல்லாம் பார்க்கனும்னு alarm வச்சிட்டு தூங்குனேன்..தூக்கம் வரவே இல்ல..10.30 மணிக்கு கடலூர் ரயில் நிலையத்துல இறங்கி் ஒரு selfie எடுத்தேன்..அந்த இரவு நேர பயணமும் சில chatகளும் ரொம்ப நாட்களுக்குப்பிறகு பெரும் மகிழ்ச்சிய உணர வச்சுது...அடுத்து வந்த தஞ்சாவூர்,திருச்சி,புதுக்கோட்டை, காரைக்குடி ரயில் நிலையங்கள்ல இறங்கி புகைப்படம் எடுத்துக்கிட்டேன்.அதிகாலை 5 மணிக்கு புதுக்கோட்டைல அந்த இரண்டு பேரையும் வழி அனுப்பி வெச்சேன்.அப்போ தான் என்னோட பெயரையே அவங்க கேட்டாங்க..அவரோட பெயர் சந்திரசேகர் னு சொல்லிட்டு உலகம் ரொம்ப சின்னது அடிக்கடி சந்திக்கலாம்னு சொல்லிட்டு புன்சிரிப்போடு விடைப்பெற்றார்..
மே 14,அரைகுறை தூக்கத்தோட 6.15 மணிக்கு சிவகங்கைல இறங்குனேன்.இராமேஸ்வரம் போக ஆசையில்ல.மதுரை பக்கம் எங்கேயாச்சும் போகலாம்னு சிவகங்கை bus standக்கு போனேன். மதுரை பெயர் பலகையோட வந்த அரசு பேருந்துல ஏறி mobileல map open பண்ணிட்டு கடைசி சீட்டுல உட்கார்ந்தேன்.நல்ல வேளையா map பார்த்ததுனால பேருந்து தவறான திசைல போகுதுனு உடனே தெரிஞ்சது.காளையார்கோவில் பேருந்து அது.நடத்துனர் விசிலடிக்கச் சொல்லி பேருந்து விட்டு இறங்கி 15 நிமிடம் நடந்தேன்.பேருந்து நிலையம் வந்த உடனே மதுரை பேருந்து தயார் நிலைல இருந்தது.அதுல ஏறி 30 ரூபாய்க்கு மதுரை டிக்கட் எடுத்துட்டு கடைசி சீடல உட்கார்ந்தேன். ஒரு மணி நேரம் தூக்கம் கலந்த அமைதியான பயணம்.
7.45 மணிக்கு மாட்டுதாவணில இறங்குன உடனே என் கண்ணுல பட்டது ஜிகர்தண்டா கடை தான்.இரண்டு ஜிகர்தண்டா சாப்டுட்டு தேனி போக பேருந்து எங்க நிக்கும்னு அந்த கடைக்கார அண்ணணிடம் விசாரிச்சேன். அதுக்கு ஆரப்பாளையம் தான் போகனும்னு அவர் சொல்லவே ஒரு மாநகர பேருந்துல ஏறி பயணமானேன்.சிம்மக்கல்,தல்லாகுளம் னு எனக்கு அறிமுகமான புதிய இடங்கள எல்லாம் பாரத்துட்டே வைகை ஆற்ற கடந்து 8.40 மணிக்கு ஆரப்பாளையம் போய் சேர்ந்தேன்.
தேனி,கம்பம்,திண்டுக்கல், பழனி,கோயம்பத்தூர்னு நிறைய வழித்தடத்துல பேருந்துகள் எல்லாம் வரிசையில நிக்க தேர்தெடுக்க திணறிட்டு நானும் ஒரு பக்கம் நின்னுட்டு இருந்தேன்.குழப்பத்துல இருந்த என்ன குறி வச்சு கொடைக்கானல் பேருந்து ஒன்னு எதிர்ல வந்து நின்னு ஏறிக்கோன்னு சொல்ற மாறி பாத்துச்சு.கடைசியா நான் நான்காவது படிக்கும் போது குடும்பத்தோடு போனது தான் கொடைக்கானல்.அப்போ செஞ்ச boatingஉம் சாப்ட கேரட்டும் இன்றும் ஞாபகம் இருக்கு.சரி,அந்த நினைவுகள புதுபிக்கலாம்னு ஒரு தண்ணீர் பாட்டிலும் சிப்ஸ் பாக்கெட்டும் வாங்கிட்டு அந்த பேருந்துல ஏறி எனக்கு ரொம்ப புடிச்ச இடமான கடைசி சீட்ல இடது பக்க ஜன்னலோரம் உட்கார்ந்தேன். 98 ரூபாய் டிக்கட் 2 ரூபாய் சில்லரைய கடைசி வரைக்கும் திருப்பித் தரவே இல்ல அந்த கடுகடுப்பான கன்டக்டர். 8.50 மணிக்கு கிளம்புன அந்த பேருந்து நிலக்கோட்டை, சிலுக்குவார்ப்பட்டி, வாடிப்பட்டி, வத்தலகுண்டு எல்லாம் கடந்து போய்ட்டு இருந்தது.காலை உணவ மறந்து கடந்து போகிற ஊர்களையும் பயணம் செய்கிற மனிதர்களையும் ரசிச்சிட்டு இருந்தேன்.
வத்தலகுண்டு தாண்டி பேருந்து மலை ஏறும்போது காது அடைப்பு வரவே வானிலை மாற்றத்தை கவனிச்சேன்.பெருமாள் மலைய கடந்த உடனே ஒரு சின்ன கடைல பத்து நிமிடம் நிறுத்துனாங்க ஒரு bun வாங்கி சாப்டேன்.ஒரு வழியா 12.45 மணிக்கு கொடைக்கானல் போய் சேர்ந்தாச்சு..WhatsAppல ஒரு status போட்டுட்டு கொடைக்கானல் ஏரி stopல இறங்குனேன்.சுத்தி பார்த்தேன்..
அங்கங்க ஊற்றெடுத்த தண்ணீர்;அழகழகா உருண்டோடிய ஓடைகள்;ஆர்பரிக்கும் பெரிய அருவிகள்;ஆரவாரமற்ற சிற்றருவிகள், இன்பச்சுற்றுலா செல்ல இத விட என்னங்க வேணும்! நம்ம ஊர் வாடைக்காற்றோட வாசம் கோடையிலும் அங்க எனக்கு கிடைத்தது..
Boating போகலாம்னு போனா பெரிய ஏமாற்றம்.அங்க இருந்த படகு எல்லாம் இரண்டு பேர் (couples) இல்லனா குடும்பமா போறவங்களுக்கு மட்டும் தானாம்.தனியா வந்ததுக்கு நான் கவலைப்பட்ட ஒரே இடம் அது மட்டும் தான்.அங்கேயே அரை மணி நேரம் இருந்து படகுல துடுப்பு போடுறவங்களையும் சின்ன பசங்க செஞ்ச சேட்டைகளையும் பார்த்துட்டு இருந்தேன். அப்படியே கால் நடையாவே Bryant park போனேன் அங்க சும்மாவே ஒரு மணி நேரத்த கழிச்சேன் பல எண்ணங்கள் மனசுல இல்ல மூளைக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு.பசி வந்து அந்த எண்ணங்கள எல்லாம் விரட்ட உணவகத்த தேடி விரைந்தேன்.நான் எதிர்பார்த்த உணவு எதுவும் கிடைகல வேற வழியில்லாம காரைக்குடி உணவகத்துல சிக்கன் பிரியாணி சாப்டேன்.உணவகத்த விட்டு வெளிய வரும்போது சரியா மணி 4.15
வாடகைக்கு bike தேடினேன் கிடைக்கல நடந்தே எல்லா இடத்துக்கும் போனேன்
உப்பு மிளகாய் தடவிய மாங்காய்,அண்ணாசி,வேகவெச்ச சோளம் இதையெல்லாம் சுவைச்சிட்டே சிற்றருவிச் சாறல்ல நினைஞ்சிட்டு இருந்தேன். மணித்துளிகள மறந்து இயற்கைக்கு முன்னாடி மண்டியிட்ட நேரம் அது.
இரவு மணி ஒன்பது ஆகிடுச்சு இப்படியே சுத்திட்டே இருந்தா எப்படி தூங்க இடம் வேணும்ல.பசிய விட சோர்வும் கால் வலியும் தான் அதிகமா இருந்தது.அங்க இங்க தேடி கடைசியா ஊருக்கு கொஞ்சம் வெளில Town Country னு ஒரு guest houseல ரூம் கிடைச்சது.1500 ரூபாய்னு சொன்ன வாடகைய பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு 650 ரூபாய்க்கு கொண்டு வந்துடேன்.அந்த வரைமுறைகள்ல கொடுமையானது காலைல 6.30 மணிக்கெல்லாம் check out பண்ணணுமாம்.நானும் தூங்க இடமிருந்தா போதும்னு ரூம்கு போய்ட்டு படுத்துட்டேன். ஆனந்தமான தூக்கம்.
அதிகாலை ஐந்தரை மணிக்கு அடிச்ச அலாரத்துல அலரி எழுந்த எனக்கு ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியல.முந்தய நாள் நடந்தது எல்லாம் கனவு மாறி இருந்துச்சு. அந்த நேரத்துல அங்க வந்த தண்ணீர்ல அஞ்சு வினாடிக்கு மேல கை வெக்க முடில அவ்ளோ குளுமை..அந்த hotelல சுடுநீர்க்கு டைமிங் வேற வச்சிருந்தாங்க 6.30 to 9.30 .சரி நாம பாக்காத குளிர் நீரா ன்னு வீராப்புல Shower ON பண்ணிட்டு தலைய காட்டிட்டு நின்னேன்..."ப்ப்பா!!!" அந்த கொடுமைய அனுபவிச்சா தான் தெரியும். இப்போ நினைச்சாலும் உடல் சிலிர்க்குது.இருந்தாலும் குளிச்சிட்டு வெளிய வந்த உடனே பெரும் புத்துணர்வு. இருந்த களைப்பெல்லாம் இருந்த இடந்தெரியாம போய்டுச்சு..
மே 15, செவ்வாய், இந்த நாளுக்கு ஒரேயொரு Program தான் "Suicide Point". ஒரு மணி நேரம் மெதுவா நடந்து போனேன். அங்க பெருசா ஒன்னும் இல்ல Choco Bar ஒன்னு வாங்கி சாப்டுட்டு கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்கு ஒருத்தர்கிட்ட Lift கேட்டு வந்து சேர்ந்துட்டேன்.
9.45 மணிக்கு மதுரை பேருந்து ஏறுனேன். அதே கடைசி இடது பக்க ஜன்னலோர சீட். Earphones எடுத்து காதுல மாட்டிட்டு கண்ண மூடி தலைய சாச்சுகிட்டேன்..அதாவது தூங்கிட்டேன்..2 மணிக்கு ஆரப்பாளையம் வந்து இறங்குனேன்.முன்னிரவு உணவும் காலை உணவும் சாப்பிட மறந்ததுனால இப்போ அளவு கடந்த பசி. உடனே Map எடுத்து நல்ல உணவகத்த தேடினேன்.. அங்க இருந்து மாநகர பேருந்து ஏறி மாட்டுதாவணி வந்து அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்துக்கு போனேன்..
Chikken Noodles, Chilly fishனு நல்லா வயிறு நிறைய சாப்டுட்டு 3.30 மணிக்கு மானாமதுரை பேருந்து ஏறுனேன்.இந்த இரண்டு நாள்ல நான் பயணம் பண்ண பேருந்துகள் எல்லாத்துலயும் கடைசி சீட் கிடைத்தது.இதுலயும் அப்படித்தான்.
5 மணிக்கே மானாமதுரை ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்துட்டேன்.7.20 மணிக்குத்தான் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் அங்க வரும்.அது வரைக்கும் mobile மட்டும் தான் எனக்கு பொழுதுபோக்கு. இரண்டு நாள்ல கிடைச்ச மகிழ்ச்சியெல்லாம் இரண்டு கைப்பேசி அழைப்புல கெட்டுப்போச்சு.முதல் அழைப்பு 6.30 மணிக்கு college staff ஒருத்தர் கிட்ட இருந்து .."நாளைக்கு எப்படியாவது college வந்துடுங்க தம்பினு சித்தப்பாவிடமும் remind பண்ணிட்டேன்"னு சொன்னாரு சரிங்க சார் ரயில் ஏற போறேன் நிச்சயமா வந்துடுவேன்னு சொன்னேன். அடுத்த அழைப்பு சித்தப்பாவிடம் இருந்து வந்தது. "நீ என்ன பண்ணுவியோ தெரியாது Call Taxi புடிச்சாச்சும் நாளைக்கு காளையில Classல இருக்கனும்"னு சொல்லி உடனே Call Cut பண்ணிட்டாரு.சித்தப்பா இப்படி எல்லாம் பேசுறது அரிது.அங்க ஏதோ நடந்து இருக்குனு என் உள்ளுணர்வுக்கு தெரிந்தது. எனக்கு இரண்டு நாட்கள் நடந்த எல்லாமே மறந்து போச்சு இவர் சொன்ன வார்த்தைகள் மட்டும் தான் கேட்டுட்டு இருந்தது.
கடைசில 7.30 மணிக்கு வந்த ரயில்ல கண்ணீரோடு ஏறி upper berthல போய்டு படுத்துட்டேன். ஒரு தண்ணீர் பாட்டிலும் மானாமதுரைல வாங்குன Bovonto வும் இரவு முழுக்க என்ன பசில இருந்து காப்பாத்துச்சு..
ஒரு வழியா என்னோட பயணம் முடிவுக்கு வந்தது..
மே 16 ,காலை 6.35 மணிக்கு எழும்பூர் வந்த ரயில்ல இருந்து இறங்கி எப்படியோ ஒன்பது மணிக்கு College போய் சேர்ந்தாச்சு...வீட்டுல என்னவெல்லாம் நடக்க காத்திருக்கோ னு எண்ணி எண்ணி நேரம் நகர்ந்தது..
மாலை கல்லூரி வளாகத்துல வீட்டிற்கு போக மனமில்லாமல் திருவள்ளூர் வழித்தட பேருந்தை நோக்கி நடந்தேன்.தடம் எண் 394 கல்லூரி பேருந்துல எனக்காக காத்திருந்தது அதே கடைசி சீட் இடது பக்க ஜன்னலோரம்!!.............