Tuesday, 7 May 2024

இளமை எனும் பூங்காற்று

05 ஏப்ரல் 2024 - வெள்ளி


மாலை மணி ஆறு. வீட்டின் ஜன்னல்கள், பால்கனி கதவுகள் அனைத்தும் மூடி விட்டு மின்சார கருவிகள் , எரிவாயு உருளை(Gas cylinder)களை மூன்று முறை சரிபா்த்து வாசற்கதவை பூட்டி விறுவிறுவென பேருந்து நிறத்தம் நோக்கி நடந்துக்கொண்டிருந்தேன்.

ஒன்பது மணிக்குள் சென்ட்ரல் சென்றடையவே இவ்வளவு பரபரப்பு. அங்கு ரயிலேறி இறங்கும் இடத்தை தவிற எங்கு செல்கிறேன் என்ன செய்ய போகிறேன் என ஒரு திட்டமும் மனதில் இல்லை.

நெரிசலான பேருந்தில் நீண்ட நேரம் நின்று கொண்டே பயணித்துக் கொண்டிருக்கும்போது அமர்வதற்காக ஜன்னல் இருக்கை கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படியே மழைச்சாரலும் தூற, பேருந்தில் இராஜா பாடல்கள் இசைத்தால்?
அதைப் போன்றதொரு அனுபவமே இறுக்கமான வேலைநாட்களுக்கிடையே இந்த திட்டமிலாப் பயணம் எனக்களித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பயணத்திற்கான தேவைகளை பட்டியல் போட்டு வாங்கிக் குவித்து ஒரு 60L Traveller's BackBagல்  சீராக அடுக்கி எதை எங்கு வைக்கிறேனென்று மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
அதில் இருந்தவை ஒரு பெரிய நீலநிற Backpack , ஒரு சிறிய சிவப்புநிற Backpack ,நான்கு நாட்களுக்கான உடைகள், நாட்குறிப்பு, Shoes, Earphones, Bluetooth speaker, Powerbank, Charger, Specs case, Wallet.

வீட்டிலிருந்து நடந்துச் சென்றுக்கொண்டிருந்த என் பரபரப்பைப் பார்த்து ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தில் பேருந்து நிறுத்தம் வரை கூட்டிச்சென்று விட அங்கிருந்து கிடைத்த பேருந்தில் ஏறி சிறுசேரி சென்று மற்றொரு பேருந்து மாறி கூட்ட நெரிசலில் பயணித்துக்கொண்டிருந்தேன். கிண்டியில் இறங்கி Pulpy Orange ஒன்று குடித்துவிட்டு மெட்ரோவில் ஏறி எட்டே முக்காலுக்கு சென்ட்ரலை அடைந்தேன்.


வழக்கமாக வாங்கும் GoodDay பிஸ்கட்டும் தண்ணீர் பாட்டிலும் வாங்கிகொண்டு B2 ல் எனது
ஜன்னல் இருக்கையில் அமர்ந்தேன். அருகிலிருந்த Bayல் வெள்ளியங்கிரி செல்லும் ஒரு நண்பர்கள் குழு இருக்கைகள் ஒரே இடத்தில் இருப்பதற்காக அங்கு குடும்பமாக வந்திருந்த நான்கு பேரை இங்கு அனுப்பினர். கணவன் மனைவி இரு குழந்தைகள். மிகுந்த தயக்கத்துடன் என்னிடம் Lower Berth கேட்கவே தூங்கும்போது எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு என் நாட்குறிப்பைத் திறந்து கிறுக்கினேன். சிறிது நேரத்தில் காற்றில் மது மணம் வரவே அருகில் எட்டி பார்த்தேன். அந்த வெள்ளியங்கிரி குழு சரக்கு பாட்டிலும் சீட்டு கட்டுகளையும் திறந்து வைப் செய்துகொண்டிருந்தனர். அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. TTE விடம் மாட்டிக்கொண்டனர்.
ரயில் அரக்கோணத்தை தாண்டியவுடன் upper berthல் படுத்துக்கொண்டு இளையராஜா பாடல்களை வரிசைப்படுத்தி கேட்க தொடங்கினேன்.

06 ஏப்ரல் 2024 - சனி


கோவையை தாண்டிய ரயிலில் என்னுடன் சேர்த்து மிகச் சிலரே இருந்தனர். பல் துலக்கி, முகங்கழுவி, T Shirt மாற்றிக்கொண்டு மேட்டுப்பாளையத்தில் இறங்கினேன்.
அங்கே ஊட்டி செல்ல இருந்த நீராவி ரயல் முன் selfie எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். 
தேநீர் அருந்திவிட்டு சில ஆரஞ்சு மிட்டாய்களை வாங்கிக்கொண்டு ஊட்டி செல்லும் புதிய மஞ்சள் நிற 3+2 அரசு பேருந்தில் ஏறி கடைசி வரிசை ஜன்னல் இருக்கையில் அமர்ந்தேன்.
ஆறரை மணிக்கு பேருந்து கிளம்பியது. 50ரூபாய் தான் பயணச்சீட்டு. வெளியே ரசிக்கும் படியான சூழல் இல்லை, காலையிலேயே வெயில் கொளுத்தியது. அரசியல் சுவரொட்டிகள், பேனர்களை கவனித்துக்கொண்டு அருகிலிருந்தவர்களிடம் பேசிக்கொண்டு நேரத்தை ஓட்டினேன்.


குன்னூர் அருகே செல்லும்போது முகத்தில் அடித்த காற்று சற்று குளிர்ந்ததை உணர்ந்தேன். அடுத்த நிறுத்தத்திலேயே பேருந்திலிருந்து இறங்கி குன்னூரில் நடையை போட்டேன். ஐந்து நிமிடத்திலேயே வியர்த்தது. வானிலை என்னை ஏமாற்றியதை உணர்ந்து இறங்கிய அதே இடத்திற்கு திரும்பி அடுத்த பேருந்தை எதிர்ப்பார்த்தேன். சில மணித்துளிகளில் 3+2 பச்சை பேருந்து வந்தது.ஆனால் இதில் கடும் கூட்டம்.தேவையில்லாமல் இறங்கியதால் ஜன்னல் இருக்கையை பறிகொடுத்து ஒரு மணி நேரம் நின்று கொண்டே பயணித்து ஊட்டி பேருந்து நிலையம் வந்தடைந்தேன்.

அருகிலிருந்த உணவகம் சென்று இரண்டு Plain தோசை ஒரு வடை வாங்கி வேகமாக உள்ளே தள்ளினேன். அவ்வளவு பசி. காசாளரிடம் ஐந்நூறு கொடுத்து மீதி சில்லறை வாங்கி வெளியேறினேன். ரயில் நிலையம் மற்றும் ஏரிக்கறை பாதையில் நடந்துக்கொண்டே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாமென்று திட்டம் தீட்டினேன்.

ஒரு நாள் அங்கு மஞ்சூர், பிக்கெட்டி  பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு மைசூர் செல்லலாமென்றிருந்தேன். ஆனால் ஊட்டியில் அடிக்கும் வெயிலை பார்த்தால் வேலூர் வெப்பமே வெட்கி தலைகுனியும் போல. இப்பொழுதே மைசூர் சென்று வீடு திரும்பினாலும் இரண்டு நாட்களில் பயணம் முடிந்துவிடும். எனவே என் வாளி அட்டவணையில்(Bucket List) ஏதேனும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்ற கோணத்தில் நாட்குறிப்பைத் திறந்து ஆராய்ந்தேன்.ஊட்டியிலிருந்து வயநாடு, மைசூரிலிருந்து கூர்க், முருதேஷ்வர் முயர்ச்சித்தால் கோவா வரை கூட செல்லலாம் என்று பல திட்டங்கள் தோன்றியது. குளிர் பிரதேசங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு கோவா மட்டும் தனியாக மின்னியது. 2019ல் இருந்தே கோவா மீதும் அங்குள்ள  Bungee jumping மீதும் ஒரு கண் வைத்திருந்தேன்.புதன் கிழமை காலைக்குள் ஊர் திரும்பியாக வேண்டும் முடியாவிட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின் புத்துணர்ச்சி் ததும்பியது. ஏரி நோக்கி சென்று கொண்டிருந்த கால்கள் மீண்டும் வந்த வழி திரும்பி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

பெங்களூர் வரை செல்லும் தமிழக அரசு குளிர்சாதன பேருந்து(3+2) ஒன்று எனக்காகவே காத்துக்கொண்டிருந்தது. மணி காலை ஒன்பதரை. மூன்று முன் இருக்கைகள் தவிற மற்ற இருக்கைகளில் எவரும் இல்லை. நான் பேருந்தில் ஏறி நடு இருக்கையில் ஜன்னலோரத்தில் அமரந்தவுடன் பேருந்து புறப்பட்டது. ஊட்டி எல்லையைத் தாண்டும் முன்பே கர்நாடகத்தை அடைந்தது போன்ற உணர்வு. பேருந்தில் கன்னட மொழி மட்டுமே என் காதுகளில் விழுந்தது. மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் நான் மட்டுமே இருந்ததால் நன்றாக கால்களை நீட்டிக்கொண்டு இராஜா பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். 
கூடலூர் வரை மலை இறக்க பாதை என்பதால் நிறைய வளைவுகளைக் கடந்து அசைந்து ஆடி தாளாட்டியது பேருந்து. நானும் சற்று கண் அயர்ந்தேன். 

அரை மணி நேரம் சென்றிருக்கும் கண் விழித்து பார்த்தால் பின் இருக்கையில் இருந்த பெண் ஒருத்தி என் அருகில் இருந்தாள். அவளின் தந்தையும் உடன் பயணித்தவர்களும் நின்று கொண்டு அவளுக்கு நீர் கொடுத்து ஏதோ கன்னடத்தில் அறிவுரை கூறி கொண்டிருந்தனர். வாந்தி வரவிருப்பதை தடுக்கவே முயர்ச்சி செய்வதாக விளங்கியது. உடனே நான் மேட்டுப்பாளையத்தில் வாங்கிய ஆரஞ்சு மிட்டாய்களை எடுத்து அவளிடம் நீட்டினேன். நன்றி கூறி வாங்கி உட்கொண்டாள். உடன் இருந்தவர்களும் சிக்கல் தீர்ந்ததென அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். அவள் சாப்பிட்ட மிட்டாயின் உறையை கீழே போடாமல் இருந்திருக்கலாம். பேருந்திலேயே குப்பைத் தொட்டியும் இருந்தது. பல்லை கடித்துக்கொண்டு மீண்டும் Spotifyகுள் குதித்தேன்.
கூடலூர் பேருந்து நிலையத்தில் பத்து நிமிடம் நின்றது. கழிவறை சென்று வந்து பார்த்தால் பேருந்து நிறம்பி இருந்தது. அங்கிருந்து தான் தவறாமல் ரசிக்க வேண்டிய பாதை ஆரம்பம். முதுமலை, பந்திபூர் பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் செல்லும் சாலை. ரஹ்மான் Playlistஐ தட்டி விட்டு ஜன்னல் வெளியே கண் வைத்துக் காத்திருந்தேன். வனச்சரக சோதனைச் சாவடிகளை கடந்து ஊர்ந்தது பேருந்து.

நேர் கோடிட்ட சாலை, நூறு மீட்டருக்கு ஒரு வேகத்தடை, கண் படும் இடமெல்லாம் அறிவிப்பு பலகைகள். "வாகனத்தை நிறுத்தாதீர்", " விலங்குகளுக்கு உணவளிக்காதீர்", "யானை,புலி நடமாடும் பகுதி" என பலவற்றை பார்த்து சிறிது சிலிர்ப்பும் பெரும் ஆர்வமும் கொண்டேன். ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் என்னை ஏமாற்றியது. காடு முழுக்க கடும் வறட்சி,மரங்கள் அனைத்தும் எப்பொழுது வேண்டுமென்றாலும் பற்றி கொள்ளலாம் என்ற அளவிற்கு காய்ந்து கிடந்தன. விலங்குகளை பார்த்தால் படம்பிடிக்க தயார் நிலையில் இருந்த என் கைகள் சோர்வடைந்தன. ஆர்வமும் ஆறி அடங்கியது. காடுகளின் மீதான வியப்பு மட்டும் அந்த பயணத்தை ரசிக்க வைத்தது. 
  
சிறிது தூரம் சென்ற பிறகு "அம்மா Deer" என்று முன்னிருக்கையில் இருந்த குழந்தை கூச்சலிட அனைவரும் இடது நோக்கினர். மான்கள் கூட்டம் காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. அதன் பிறகு நிறைய மான் கூட்டங்களைக்காண நேர்ந்தது. இறுதியாக தெப்பக்காடு எனும் கிராமத்தை நெருங்கும் முன் மூன்று யானைகளை தனிதனியாக கண்டேன்.இந்த பாதையில் என் இரு சக்கர வாகனத்தில் பருவமழைக்காலத்தில் பயணம் செய்வதாகத் தான் என் Bucket Listல் இருந்தது. இப்பொழுது கிடைத்த வழியில் நிறைவேற்றிக்கொண்டு அட்டவணையில் டிக் செய்துக்கொண்டேன். 

வனப்பகுதியை கடந்து குன்ட்லுபெட் அருகே ஒரு உணவகத்தில் நிறுத்தினர். மோர் மட்டும் பருகிவிட்டு ஒரு மரத்தடியில் இளைப்பாறினேன். முப்பது நிமிடத்தில் பேருந்து புறப்பட்டு 15:50 மணிக்கு மைசூரை அடைந்தது.


பேருந்தை விட்டு இறங்கியவுடன் Cloak Room சென்று என் உடமைகளை வைத்துவிட்டு ஒரு உணவகத்தில் சிக்கன் பிரியாணி உட்கொண்டேன். பாஸ்மதி் அரசியில் மிதமான மசாலாவுடன் மிகவும் சுவையாகவே இருந்தது. 
உணவிற்கு பின் மங்களூர் செல்லும் பேருந்தை தேடி பேருந்து நிலையத்தை சுற்றிப்பார்த்தேன். எங்கு பார்த்தாலும் கன்னட பெயர்பலகைகள் மட்டுமே இருந்தன. "KARNATAKA SARIGE' என்ற வாரத்தையை தவிற வேறு எந்த ஆங்கில வார்த்தையும் பேருந்துகளில் இல்லை. சில ஓட்டுநர்களிடம் விசாரித்துவிட்டு அவர்கள் திசைகாட்டிய இடத்திற்கு சென்று கூகிலில் மங்களூர்க்கு இணையான கன்னட வார்த்தையை எடுத்து வைத்து பெயர்பலகைகளை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு பார்த்தேன். அந்த தடத்தில் செல்லும் சிவப்பு நிற கர்நாடக அரசு பேருந்துகள் அனைத்தும் கூட்டமாகவே இருந்தது. கடும் களைப்பில் இருந்த எனக்கு சிறிது சொகுசு பயணம் தேவைப்பட்டது. Red bus செயலியை திறந்து மங்களூர் செல்லும் பேருந்துகளை தேடினேன். அதில் மாலை நான்கரை மணிக்கு ஒரேவொரு தனியார் பேருந்து மட்டுமே காட்டியது. Sea Bird Travels-Non AC Sleeper .அதிலும் கடைசி Berth தான் இருந்தது. அதை பதிவு செய்யும்போது தான் கவனித்தேன் அந்த பேருந்து மங்களூர் வழியாக கோவா வரை செல்கிறதென்று. முருதேஷ்வர் வரை பதிவு செய்துவிட்டு பேருந்து நிலையத்திலேயே என் கைப்பேசியை Charge போட்டுவிட்டு அமர்ந்தேன். 

நேரம் நெருங்கியவுடன் Cloak Room சென்று என் பையை எடுத்துக்கொண்டு செயலியில் பேருந்தின் இருப்பிடம் பார்த்துக்கொண்டே பேருந்து நிலையம் எதிரே சென்று நின்றேன்.நான் பதிவு செய்த பேருந்து சற்று தாமதமாகவே வந்தாலும் நிற்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் வேகமாக வருவதைக் கண்டு கைகளை உயர்த்தி நிற்க கூறினேன். வேகத்தைக் குறைத்து என்னவென்று விசாரித்தார்களே தவிற பேருந்தை நிறுத்தவே இல்லை. நான் பதிவு செய்திருக்கிறேன் என்று ஆங்கிலதில் விளக்குவது அவர்களுக்கு புரியவில்லை, ஏதோ Lift கேட்பதாகவே நினைத்தனர். உள்ளே ஏறி விளக்கி கொள்ளலாமென்று மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் எறிவிட்டேன். சிறு பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் பதிவேட்டை புரட்டி பார்த்தனர். அதில் என் பெயர் இருந்ததை சுட்டிக்காட்டி பெருமூச்சு விட்டேன். ஆங்கிலத்தை விட தமிழையே ஓரளவிற்கு புரிந்து கொண்டனர் அங்கிருந்த ஓட்டுனரும் உதவியாளரும். 


நான் பதிவு செய்த இருக்கை அவ்வளவு வசதியாக இல்லை, Charging Socket உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது, தலை சாய்க்கும் இடத்திற்கருகில் ஜன்னல் கம்பி ஆபத்தான நிலையில் நீட்டி கொண்டிருந்தது. ஆனால், பேருந்தின் கடைசியில் Single side Upper berth என்பதால் சற்று தனிமை கிடைத்தது. மைசூர் அரண்மனையைக் கடந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது. சாலைகள் சமவெளியில் இல்லாமல் மேலும் கீழும் மாறி மாறி அமைந்திருந்தது. மாலை ஆறு மணி கடந்ததும் காற்று தண்மையானது , மேற்கே சூரியன் மறையும் காட்சி தார்ச்சாலையோடு சேர்த்து ஓவியமாகவே தீட்டியது. 


இரவு உணவிற்காக எட்டு மணிக்கு மடிக்கேரியில் ஒரு நிறுத்தம். கடல்மட்டத்தில் இருந்து 3800 அடியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் ஊர் அது. மலை பிரதேசமாக கருத கூடிய அளவிற்கு குளிர் இல்லை. "ஹோட்டல் ஸ்ரீ ஷாந்தி சாகர்" எனும் உணவகத்தில் இரண்டு இட்லி ஒரு வடை சாப்பிட்டேன். உடுப்பி சாம்பார் அருமையாக இருந்தது. விட்டிருந்தால் ஆறேழு இட்லிகளை உள்ளே தள்ளியிருப்பேன் , பயணம் என்பதாலும் பேருந்து என்னை விட்டுவிட்டுச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தினாலும் இரண்டோடு எழுந்துச் சென்றேன். அதன்பிறகு பதினைந்து நிமிடம் கழித்தே வண்டியை எடுத்தனர்.

            

மடிக்கேரிக்கு பிறகு மலையிறக்க பாதையாக இருந்தது. நிறைய வளைவுகளில் பேருந்தை வேகமாக செலுத்திக்கொண்டிருந்தார் ஓட்டுநர். நீட்டிக்கொண்டிருந்த ஜன்னல் கம்பி அடிக்கடி என் தலையை பதம் பார்க்கவே ஒரு துணி எடுத்து அதன் கூரிய முனையை மூடினேன். காதுகளில் இராஜா பாடல்கள் ஒலிக்க, பின்னோக்கி சரசரவென செல்லும் சாலையோர மின் விளக்குகள் கண்களில் பட்டு ஒளிர தூக்கமென்பதே மறந்தது. 

ஒரிரண்டு முறை ஓட்டுநர் அருகே சென்று வேடிக்கை பார்த்தேன் .ஏனோ அவர்கள் என்னை ஆரம்பம் முதலே விரும்பவில்லை. மொழி காரணமாக இருக்கலாமென்று இருக்கைக்கு திரும்பி தூங்க முயரச்சித்தேன். இரவு பதினொன்றரை மணிக்கு மங்களூர் அடைந்தோம். அங்கு அரை மணிநேரம் நிறுத்தி விட்டு பார்சல்களை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்தனர். நானும் கீழிறங்கி கழிவறை தேடினேன், கிடைக்கவில்லை. அங்கிருந்து பேருந்து புறப்பட்டு இரண்டரை மணிக்கு ஷிரூர் சுங்கச்சாவடியில் தான் கழிவறைக்காக இரண்டு நிமிடம் நிறுத்தினர். 

"மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே.." என மனோ என் செவிகளில் பாடிகொண்டிருக்கும்பொழுது மரவன்தே கடற்கரை கடந்தது பேருந்து. காரிருளில் கருங்கற்கள் மேல் மோதும் கடலலைகளின் ஓசை இராஜாவின் மெட்டுக்களைத்தாண்டி கேட்டது. எட்டிப்பார்த்தால் கடலரிப்பைத் தடுக்க போடபட்ட கற்கள் மட்டும் பேருந்தின் வெளிச்சத்தில் புலப்பட்டன.

07 ஏப்ரல் 2024 - ஞாயிறு


எப்பொழுது உறங்கினேனென்றே நினைவில்லை முன்னிரவில் வைத்த அலாரம் ஒலிக்கவே திடுக்கிட்டு எழுந்து Google Mapல் பார்த்தேன். முருதேஷ்வரைக் கடந்து 8 கி.மீ. சென்றிருந்தது பேருந்து. உடனே Earphones, Charger, Powerbank அனைத்தும் பைக்குள் எடுத்து வைத்து செருப்பை மாட்டிக்கொண்டு ஓட்டுநரை நோக்கி ஓடினேன். அவரோ நீண்ட தூரம் வந்து விட்டோம் திரும்பி போக முடியாது அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளென எளிதாக கூறினார். ஐந்து நிமிடத்தில் ஏதோ ஒரு சிறிய சந்திப்பில் பேருந்தை நிறுத்தினார். இது பேருந்து நிறுத்தம் தானா? பாதுகாப்பான இடம் தானா? என சில கேள்விகளுக்குப் பிறகு இறங்கினேன், அவரின் கன்னட பதில் ஏதும் புரியாமல். 

சில நிமிடங்களிலேயே பதில் தெரிந்தது. அந்த நெடுஞ்சாலை சந்திப்பில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஒரு கட்டிடமோ கல்லரையோ கூட இல்லை. பேருந்து நிறுத்தத்திற்கான அறிகுறியே இல்லை. அவ்வழி கடக்கும் அனைத்து வாகனங்களும் நிறுத்தக்கோரி கைக்காட்டினேன். ஒருவரும் மதிக்கவில்லை. 15 நிமிடம் கழித்து ஒரு தனியார்  AC Sleeper பேருந்து நின்று "எல்லி" எனக்கேட்டார் அப்பேருந்தின் ஓட்டுநர். முருதேஷ்வர் எனக்கூறியதும் கடுகடுத்து கன்னடத்தில் ஏதோ வசை பாடியபடியே கிளம்பிவிட்டார். எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கொடுக்கிறேன் என விளக்குவதற்கு கூட அவர் நேரம் கொடுக்கவில்லை. ஏறத்தாழ ஒரு மணி நேரம் முயர்ச்சித்தும் எவரும் நிற்கவில்லை அரசு பேருந்துகள் உட்பட.

அதிகாலை மூன்றேமுக்கால் மணிக்கு தனியாளாக செய்வதறியாது நின்றிருந்தேன். ஒரு சிறிய மஞ்சள் நிற ஹேலோஜன் தெரு விளக்கு மட்டும் எனக்கு ஆறுதலாக ஒளி வீசி உடன் நின்றிருந்தது.
இரண்டு மணி நேரம் கடந்தால் போதும் எப்படியும் வழி கிடைக்குமென்று Lift கேட்பதை நிறுத்திவிட்டு சாலையோரம் இருந்த கான்கிரீட் கால்வாய் மேல் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் ஒரு Tata Indica வாகனம் வேகத்தைக் குறைத்து அருகில் வந்தது. மஞ்சள் நிற பெயர் பலகையைப் பார்த்து நம்பிக்கை பிறந்தது. எழுந்து நின்று கைக்காட்டினேன். காரின் ஓட்டுநர் என்னை நன்கு கவனித்துக்கொண்டே ஐம்பது மீட்டர் தள்ளி நிறுத்தினார். காரை நோக்கி ஓடினேன். அவரோ காரை முதல் கியரில் வைத்து Accelerator மேல் காலை அழுத்திக்கொண்டு தயார் நிலையில் இருந்தார். நான் வழிபறி கொள்ளைக்காரனாக இருப்பேனோ என்ற அச்சம். அனைத்தும் விளக்கியபின் ஐம்பது ரூபாய்க்கு முருதேஷ்வர் சந்திப்பில் இறக்கிவிடுகிறேன் என்று ஏற்றிக்கொண்டார்.

நூறு ரூபாய் கொடுத்துவிட்டு சந்திப்பில் இறங்கி முருதேஷ்வர் கடற்கரை நோக்கி நடந்தேன். நாய்கள் குறைத்துக்கொண்டே என்னை வரவேற்றன. சிறிது தூரத்தில் 'Naik Residency'  என்றொரு விடுதியைப்பார்த்து உள்ளே சென்றேன். வரவேற்பறையில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி நான் தூங்க அறை கேட்டேன். ஆயிரம் ரூபாய் என்று ஒரு அறையை காட்டினார். குளிர்சாதனமும் இல்லை கழிவறைக்கதவும் சிறிது உடைந்துள்ளது என நான் சுட்டிக்காட்ட எண்ணூரு ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு பதிவேட்டில் குறித்துக்கொண்டார். அறைசென்று மெத்தையில் விழுந்து உறங்கினேன்.

காலை ஆறேகால் மணிக்கே எழுந்து குளித்துவிட்டு கடற்கரை கோவிலை நோக்கி நடந்தேன். நான் உள்ளே செல்லும்போதுதான் நடை திறக்கப்பட்டது. பிரதான கோபுரம் பராமரிப்பிற்காக சாரம் கட்டி வைத்திருந்தனர். மேலே செல்ல அனுமதி இருக்காதோ என்ற அச்சத்துடனே மின்தூக்கியை அனுகினேன். கோவில் அலுவலர் வந்து டிக்கட் கொடுப்பார் காத்திருங்கள் என மின்தூக்கி இயக்குபவர் அறிவுறுத்தினார். வரிசையி்ல் ஏற்கனவே ஐந்து பேர் வெள்ளை வேட்டி சட்டையுடன் நெற்றியில் திருநீறு பூசி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தமிழில் பேசிக்கொண்டதைக் கேட்டு என்னை அறிமுக படுத்திக்கொண்டேன். அவர்களும் சென்னை தான். கர்நாடகத்திற்கு கோவில் சுற்றுலாவாக வந்திருந்தனர். டிக்கட் எடுத்து மேலே சென்று பார்த்தால் ஒருபுறம் கடலின் காட்சி கண்களை பறித்தது. இன்னொருபுறம் பெரிய சிவன் சிலை. புகைப்படங்கள் சில எடுத்துக்கொண்டு கீழிறங்கி சிவன் சிலை இருந்த இடத்திற்கும் சென்று வந்தேன். 

கோவிலுக்கு வடக்கிருந்த கடற்கரையில் நிறைய நீர் விளையாட்டுக்கள் இருந்தும் எதையும் முயற்சிக்காமல் அடுத்து கோவாவை எப்படி அடையலாம் என்று சிந்தித்தேன். பேருந்து ஏதும் இல்லாததால் ரயிலைத் தேடினேன். காலை 9:45 க்கு மேட்காவுன்(Madgaon-Goa) வரை செல்லும் ஒரு ரயில்(06602) இருந்தது. Premium தட்கலில் பதிவு செய்துவிட்டு உணவகம் சென்று இட்லி வடை வாங்கினேன். முந்நாள் மடிக்கேரியில் உண்ட அதே சுவை. கர்நாடகத்தில் சாம்பாரை அள்ளி ஊற்றுகிறார்கள், ஏனோ இட்லியை மட்டும் இரண்டு Spoon கொண்டே உட்கொள்கின்றனர். 
 

காலை உணவை முடித்துவிட்டு ஆட்டோவில் விடுதி் சென்று ஓய்வெடுத்தேன். ஒன்பது மணிக்குமேல் மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு BackBagஐ மாட்டிக்கொண்டு அறையை பூட்டி கிளம்பினேன். வரவேற்ப்பறையில் அந்த நபர் அப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்தார். மீண்டும் ஒருமுறை அவரை எழுப்பி சாவியைக் கொடுத்துவிட்டு நன்றி கூறி விடைப்பெற்றேன்.

நடந்தே ரயில் நிலையம் சென்றேன்.ஒரு தேநீரும் குளிர்ந்த தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு முதலாம் நடைமேடையில் அமர்ந்தேன். வழக்கம்போல் ரயில் தாமதமானது. அருகிலிருந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் அவர்களை புகைப்படம் எடுக்க என்னிடம் உதவி கேட்டு அறிமுகமானார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டே நேரம் கழிந்தது. 
ரயில் வந்ததும் D1 பெட்டியில் ஏறி 64ஆவது இருக்கையில் அமர்ந்தேன். 

நடு இருக்கை என்பதால் கவலையில் இருந்தேன். இடது இருக்கையில் ஒரு பெண் வந்து அமர்ந்தார் வலது இருக்கையில் அவரின் அம்மா. அவரின் தந்தை Side Lower ஜன்னல் இருக்கையை என்னிடம் கேட்டு மாற்றிக்கொண்டு வந்து அவரின் மகளருகில் அமர்ந்துகொண்டார். அவர்கள் எனக்கு நன்றி கூறவே ஜன்னலிருக்கை அளித்த உங்களுக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும் என பதிலளித்தேன். அப்படியே அந்தக் கன்னட குடும்பத்திடம் பேச தொடங்கி தலைப்பு எங்கெங்கோ சென்றது. 
அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களும் எங்களிடம் அறிமுகம் செயதுக்கொண்டனர். அவர்களுள் ஒரு பெண் இரு ஆண் மாணவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த மூவரும் Manipal Universityல் படிப்பதாகக் கூறினர். மூன்று மாநிலத்தைப் பற்றியும் மாறி மாறி உரையாடும்போது மேற்க வங்கத்து மாணவி தமிழ்நாட்டைப்பற்றி கூறிய ஒன்று என்னை தலைகுனிய வைத்தது. தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு பெண் Sleeveless உடையில் சென்றாலே வெறித்துப் பார்ப்பர் என்ற உண்மை தான் அது. முன்பொரு தோழி என்னிடம் பெங்களூரையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு இதேபோல் பேசியது நினைவுக்கு வந்தது. அவர்களோடு சேர்ந்து தமிழக ஆண்களை வசைபாடிவிட்டு அடுத்த தலைப்பிற்கு நழுவினேன். அவர்களும் கோவாவிற்குத்தான் சென்றுகொண்டிருந்தனர். நான் தனியாக Bungee Jumpingற்காக மட்டுமே கோவா செல்கிறேன் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

சில நேரம் கழித்து கன்னட குடும்பம் கோகர்னாவில் சிரித்துக்கொண்டே விடைப்பெற்றனர். மணிப்பால் மாணவர்கள் Blue tooth Speaker எடுத்து பாடல்களை ஒலிக்கவிட்டு vibe செய்தனர். ரயிலில் அவ்வளவு கூட்டம் இல்லையென்பதால் யாருக்கும் இது இடையூராக இல்லை. 

அந்த ரயில் பாதை மலைகளுக்கு நடுவே நிறைய சுரங்கப்பாதைகளுள் ஊடுருவி நிறைய ஆற்றுக்கழிமுகங்களை கடந்து செல்வதை ரசித்துக்கொண்டே இவர்கள் கேட்டுக்கொண்டிருந்த புரியாத இந்தி பாடல்களையும் ரசித்தேன். எனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பாடல்களுக்கு மட்டும் கூகுளில் பாடல் வரிகளை பார்த்து அவர்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டே நேரத்தை உருக்கினேன். 

மதியம் ஒன்றரை மணிக்கு ரயில் மேட்காவுன் நிலையம் அடைந்தது. ரயிலிலிருந்து இறங்கி Google Mapல் இருசக்கர வாகனம் வாடகை எடுக்க நல்ல கடையைத் தேடி ஸ்ரீ சங்மேஷ்வர் எனும் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் ரயில் நிலைய வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தார். ATMல் மூன்றாயிரம் பணம் எடுத்துக்கொண்டு அவருடன் சென்றேன். 

ஆதார் அட்டையையும் முன்பணமாக இரண்டாயிரமும் பெற்றுக்கொண்டு Honda Activa வாகனத்தை அளித்தார். சாவி போடும் இடம் மட்டும் சிறிது உடைந்திருந்ததை சுட்டிக்காட்டிவிட்டு எடுத்துக்கொண்டேன். அருகிலிருந்த bunkஇல் petrol போட்டுக்கொண்டு Longuinhos Restuarantல் அமர்ந்தேன். மது இல்லாமல் எந்த உணவகமும் இங்கு இயங்காது போல. Menu cardஐ திறத்ததும் பல்வேறு cocktailகள்தான் கண்ணில்பட்டன. 
பிரியாணி ஒன்று ஆர்டர் செய்துவிட்டு Jumping Heightsஐ தொடர்புகொண்டேன். அன்று ஞாயிறு என்பதால் நிறைய முன்பதிவுகளிரும் திங்கட்கிழமை தான் எனக்கு Bungee Jump செய்ய வாய்ப்பு கிடைக்கும் என நினைத்திருந்தேன். அவர்களோ ஐந்தரை மணிக்குள் வந்தால் இன்றே குதிக்கலாம் என்றனர்.             


முன்பதிவை உறுதி செய்துவிட்டு பிரியாணியை பிரித்து மேயந்தேன். ஹைதராபாத் ஸ்டைலும் கேரளா ஸ்டைலும் கலந்து செய்ததைப் போன்ற சுவை. உடன் தொட்டுக்கொள்ள பச்சை நிறத்தில் ஏதோ வைத்திருந்ததை சிறிது தயக்கத்துடனே அனுகினேன். தேவாமிர்தமாக இனித்தது. அதன் பெயரைக்கூட கேட்க நேரமில்லாமல் பணத்தை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தேன். 

மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருக்க ஐம்பதைத்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இடத்திற்கு ஐந்தரை மணிக்குள் சென்றாக வேண்டும். Mapல் வழிக்காட்டியை போட்டுவிட்டு வழிகளை சிறிது மனப்பாடமும் செய்துக்கொண்டு ஒரு காதில் மட்டும் Earphones மாட்டி அதன்மேல் தலைக்கவசம் அணிந்து புழுதி பறக்க பறந்தேன். 

கோவாவின் சுத்தமான சாலைகளும் , ஓட்டுநர்களின் சாலை ஒழுக்கமும் ஆச்சர்யத்தை அதிகரித்தது. போக்குவரத்து நெரிசல் பெரிதாக இல்லை ,பெரும்பான்மையான வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்தே பயணித்தனர், போக்குவரத்துக்காவலர்களையும் அரிதாகவே காண நேர்ந்தது. சுவாரி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த தொங்கு பாலத்தை பிரம்மிப்புடனே கடந்தேன்.

அழகான சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே ராட்சத பேனர்களில் மோடி சிரித்துக்கொண்டிருந்தது மட்டும் என்னை எரிச்சலடைய வைத்தது. 

நினைத்த நேரத்தைவிட முன்னரே இலக்கை அடைந்து விடலாமென எண்ணிய சில நிமிடங்களிலேயே குறுக்கே வந்து நின்றது மண்டோவி எனும் ஆறு. வாகனங்களை ஏற்றிச்செல்லும் படகில்(Ferry) தான் ஆற்றை கடக்க முடியும். அடுத்த படகு வருவதற்கு 15நிமிடமாகும் என அறிந்ததும் Mapல் மாற்று பாதையை தேடினேன். ஆறு கிலோமீட்டர்கள் சுற்றிசெல்லும் வழியில் வண்டியை திருப்பினேன். கிராமங்களின் நடுவே குறுகிய சாலைகளில் விவேகம் கலந்த வேகத்தில் விரைந்தேன். சரியாக மாலை 5:20 மணிக்கு இலக்கை அடைந்தேன்.

மேயம்(Mayem Lake) எனும் ஏரிக்கறையில் அழகான இடத்தில் அமைந்திருந்தது Jumping Heightsஇன் அலுவலகமும் அதன் Bunjee Jumping Towerஉம்.மற்றவர்கள் குதிப்பதை காணக்கூடிய இடத்தில் அவர்களின் அலுவலகமும் Cafeம் இருந்தது. மதியம் முன்பதிவு செய்ததை காண்பித்து பணத்தை செலுத்திவிட்டு தயார்படுத்தும் அறையில்(Briefing room) காத்திருந்தேன். அங்கு எப்படி குதிக்க வேண்டும், என்னவெல்லாம் தவிர்க்கவேண்டும் என சிறு காணொலி காட்சிப்படுத்தி சுய விவரங்களை சேமித்துக்கொண்டனர். என் உடல் எடையையும் பரிசோதித்து அறுபத்தொன்று என என் கைகளில் குறித்தனர். என் எடை அறுபது கிலோவை கடப்பது வரலாற்றில் இதுவே முதன்முறை.
 

ஒப்பனை அறை சென்று உடைமாற்றி வந்து எனக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டியில்(Locker) என் உடைமைகளை வைத்துப் பூட்டிவிட்டு காத்திருந்தேன். முன்பு சென்றவர்கள் மேலிருந்து குதிப்பதை பார்த்து சிறிய அச்சம் என்னை அசைத்தது. அடுத்து என்னையும் என்னுடன் காத்திருந்த இன்னொருவரையும் மேலே செல்ல பணித்தனர். அந்நாளின் இறுதியாக குதிப்பவர்கள் நாங்கள் இருவர் தான். Jumping Tower மேலே மின்தூக்கியில் செல்லும்போது ஒருவித படபடப்பு தொற்றிக்கொண்டது.55 மீட்டர் உயரத்தில் குதிக்கும் நடைமேடையிலிருந்து கீழே பார்க்கும்பொழுது அச்சத்தின் அலை மேலும் ஆர்பரித்தது. அங்கிருந்த குழு என்னிடம் பாதுகாப்பு பெல்ட்டுகளை அணிவித்துக்கொண்டே அறிவுரைகளை அவிழ்த்து விட்டனர். நான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி அவர்கள் வைத்திருந்த சிறு பெட்டியில் போட்டு அந்த பெட்டியையும் என்னுடைய பெல்ட்டிலேயே மாட்டினர். கீழே தரையிறங்கியவுடன் அணிந்துக்கொள்ள வசதியாகவே இருக்கும்.

நல்ல Free Fall அனுபவத்தை பெற வேண்டுமென்றால் கைகளை விரித்து நடைமேடையிலிருந்து முடிந்தவரை தூரமாக தாவி குதிக்க வேண்டும் எனவும் பயம் இருந்தால் தோள்பட்டையிலுள்ள பெல்டுகளை பற்றிக்கொண்டு குதிக்க வேண்டுமெனவும் அறிவுருத்தப்பட்டேன்.
குதிப்பதற்கு முன் கீழே பார்க்க கூடாது ஏதும் சிந்திக்க கூடாது என கூறி என் முதுகை தட்டி உற்சாக படுத்தி நடைமேடையின் விளிம்பிற்கு அழைத்துச்சென்றனர். அங்கு நின்று கீழே பார்க்காமலும் என்னவாகுமோ என சிந்திக்காமலும் இருக்க எவராலும் முடியாது. 
ஏதேதோ எண்ணங்கள் அலையடித்துக்கொண்டிருக்க பின்னிருந்து வந்த குரல் 
"Three, Two, One ...Jump! " 
எனக் காதில் கத்தியது. மூன்று நொடிகள் தயங்கினேன். 
"Grab Your shoulder belt, Don't think, Just jump" 
என மீண்டும் அந்த குரல் அதட்டியது. 

இத்தனை நாள் ஆசைப்பட்டு இவ்வளவு தூரம் பயணித்து இங்கு வந்து தயங்குவதா என துணிச்சல் அனைத்தும் அணி திரட்டி கைகளை விரித்து ஊர் கிணற்றில் Dive அடிப்பதைப்போல் பாய்ந்தேன்.
 
காற்றில் விழுந்துக்கொண்டிருந்த அந்த நொடிகளில் முன்பிருந்த அச்சமனைத்தும் ஆரவாரமாக மாறி ஆனந்த களிப்பில் ஆழ்த்தியது. பறந்துக்கொண்டிருந்த என்னை கால்களில் கட்டியிருந்த ரப்பர் கயிரு இழுத்து தலைகீழாக்கி தொங்கவிட்டு மேலும் கீழும் மூன்று முறை ஊசலாடி ஓய்ந்தது. உடல்முழுக்க அட்ரினலின் தாக்கத்தை நன்றாகவே உணர முடிந்த்து.கால்களில் மெல்லிய நடுக்கம். 

கீழே என்னை பிடித்து இறக்கியவர்கள் வாழ்த்திவிட்டு நெஞ்சில் குத்திக்கொள்ள Badge ஒன்றையளித்து வழியனுப்பினர். அந்த அலுவலகம் சென்று என் பைகளை எடுத்துக்கொண்டு காத்திருந்தேன். நான் குதித்த காணொலியை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு சான்றிதழ் ஒன்றை வழங்கினர். நன்றி கூறி விடைப்பெற்றேன்.

தலைகவசம் அணியாமல் Earphones மட்டும் மாட்டி மிதமான வேகத்தில் இருசக்கர வாகனத்தை செலுத்தினேன். ஆளரவமற்ற கிராமத்துத் தார்ச் சாலை, இருபுறமும் அடரத்தியான செடிகள்கொண்ட செம்மண் நிலபரப்பு, வலது கை வாகனத்தை இயக்க இடது கை தலைமுடியைக் கோத முகத்தில் புன்முறுவலுடன் காதில் கேட்கும் பாடலை பாடிக்கொண்டே பயணித்தேன்.

"இளமையெனும் பூங்காற்று...
பாடுவது ஓர் பாட்டு...
ஒரு பொழுதிலோர் ஆசை...
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்!!!"
 
பல ஆண்டுகளாக செய்ய நினைத்துக்கொண்டே இருந்ததை செய்து முடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தேன். அது வரை பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்த என் பயணத்தில் இந்த Bungee Jump ஒரு இடைவேளையாகவே அமைந்தது.


................


கிட்டதட்ட பத்து கி.மீ. கடந்த பின் மண்டோவி ஆற்றங்கரை அடைந்தேன். ஒரு தேநீர் அருந்திவிட்டு அங்கு இருந்த படகில்(Ferry) வண்டியை ஏற்றினேன். டிக்கட் யாரிடம் எடுக்க வேண்டும் என கேட்டதுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என பதிலளித்தனர் உள்ளூர்வாசிகள். 

தட்டையாக பெரியதாக இருந்த படகின் முன்புறத்தில் என்னுடன் சேர்ந்து பன்னிரண்டு இரு சக்கர வாகனங்களும் இரண்டு கார்களும் அப்படகில் பயணித்தன பின்பகுதியில் மக்கள் அமரந்திருந்தனர்.

மெதுவாக மிதந்துக்கொண்டே ஆற்றின் ஓட்டத்திற்கு சற்று எதிர்திசையில் விசையை செலுத்தி ஊர்ந்தது படகு. மேற்கு நோக்கினால் வெகுதொலைவில் ஆற்றின் மேலே கடக்கும் தொங்கு மேம்பாலமும் அதன் பின் அந்த ஆறு கடலில் கலக்கும் கழிமுகமும் மங்கலாக காண முடிந்தது. 

மணி மாலை ஆறை கடந்து அந்திவானம் அரிதாரம் பூசி தொடுவானக் கடலில் மூழ்கவிருந்த சூரியன் சிறிய நாணயமாகி அந்த மேம்பாலங்களின் ஊடே காட்சி அளித்தது. இதை கண்டால் வான்கோவே வாயடைத்துப் போவார்.

ஆற்றைக்கடந்து படகிலிருந்து சாலை சேர்ந்து நகரத்தை அடைவதற்குள் நன்கு இருட்டியது. இரவு தூங்குவதற்கு Cottage அல்லது Zostel போன்ற இடங்கள் கடலோரமாக இருக்கிறதா என கூகுளில் தேடினேன். பெனாலிம் கடற்கரையில் ஓரிடண்டு இடங்களை தேர்ந்தெடுத்து முன்பதிவு ஏதும் செய்யாமல் நேரடியாகவே விரைந்தேன்.

Costello's Coco Huts எனும் தங்குமிடத்தை அடைந்தேன். கடற்கரைக்கு எதிரிலேயே தனித்தனி குடிசை போன்று அமைக்கப்பட்டிருந்த்தைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. எண்ணூறு ரூபாய்க்கு பேசி பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன். சொகுசான அறை இல்லையென்றாலும் பெரிய படுக்கையிருந்தது. குளித்துவிட்டு உடைகள் மாற்றிக்கொண்டு ஓய்வெடுத்தேன். 

Bungee Jumping videoவை Instagram storyல் பதிவேற்றிவிட்டு கடற்கரையில் அமைந்திருந்த shackற்கு சென்று அமர்ந்தேன். சுற்றி இருந்த அனைவரின் மேசைகளிலிலும் மதுவிருக்க நான் என்ன வாங்குவது எனும் குழப்பத்தில் Menu Cardஐ புரட்டினேன். 

ஒரு Breezer, Chicken fried rice, Chicken lollipop order செய்துவிட்டு Insta storyக்கு reply செய்திருந்த நண்பர்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன். நான் கோவா வந்தது எவருக்கும் அதுவரை கூறவில்லை. திட்டமிலாப்பயணம் என விளக்கியும் சிலர் நம்பவில்லை.சிறிது நேரம் பேசிவிட்டு இணையத்தை அணைத்துவிட்டு உணவிற்காக காந்திருந்தேன்.

அங்கு ஒரு பெரிய திரையில் IPL போட்டி MI vs DC ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.அதில் அவ்வளவு நாட்டமில்லாமல் அங்கிருந்த Bartender Cocktailகளை திறமையாக கலக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். 
பின் Breezer குடித்துக்கொண்டே சாப்பிட தொடங்கினேன். Fried rice உப்புச்சப்பு இல்லாமல் வெறும் சோற்றில் கறி சேர்த்ததைப்போல் இருந்தது. நல்ல சுவையாக இருந்த Lollipopஐ மட்டும் முழுவதும் முடித்து Fried riceஐ பாதி வைத்துவிட்டு Bill கேட்டேன். 

Gpayல் பணம் செலுத்தும்பொழுது 'Insufficient balance' என்று காட்டியதும் அதிர்ந்தேன். என்ன தான் திட்டமற்ற பயணமாக இருந்தாலும் செலவழிக்கும் பணத்தைக்கூட கணக்கில் கொள்ளாமலா இருப்பது என என்னை நானே கடிந்துக்கொண்டு தோழியொருத்தியை தொடர்ப்புக்கொண்டேன். உடனடியாக ஐந்தாயிரம் வந்தது. 

உணவகத்தில் Gpay செய்தபின் கடற்கரையில் சிறிது நேரம் நின்றுவிட்டு அறைக்குத் திரும்பினேன். சென்னை செல்ல IRCTCல் ரயில்களைத் தேடினேன். அடுத்த நாள் இரவு புறப்படும் வாஸ்கோ- யஸ்வந்த்பூர் ரயிலில் Premium Tatkalல் முன்பதிவு செய்துவிட்டு உறங்கினேன்.

08 ஏப்ரல் 2024 - திங்கள்


காலை ஏழு மணிக்கு அடித்தது அலாரம். ஐந்து நிமிடம் கழித்து எழுந்து பல்துலக்கிவிட்டு நாட்குறிப்பையும் Bluetooth speakerஐயும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்று அமர்ந்தேன். பாடல்களை கேட்டுக்கொண்டே மூன்று நாட்கள் விடுபட்ட பக்கங்களை நிரப்பிவிட்டு பெனாலிம் கடற்கரையின் காலைக்காட்சிகளை ரசித்தேன். 



ஒரு மணி நேரத்திற்குப்பிறகு இரு சக்கர வாகனத்தில் உணவகம் தேடி புறப்பட்டேன். 'Savio's Bar and Restuarant' எனும் உணவகத்தில் நுழைந்து English Breakfast ஒன்று Order செய்தேன்.உணவை தயார் செய்ய சென்ற பணியாளர் திரும்பி வந்து Pork இருக்கும் ஏதும் சிக்கல் இல்லையா என உறுதி செய்துக்கொண்டார். 

சில நிமிடங்கள் கழிந்ததும் Toasted Bread, Beans, poached eggs, bacon, Pineapple juice அனைத்தும் வந்து சேர்ந்தன. முதன்முறையாக Baconஐ முயற்சிக்கிறேன், மிகவும் பிடித்தது. அன்னாச்சி பழச்சாறும் நான் அதுவரை குடித்ததிலேயே சிறந்தது எனலாம். முழுதும் உண்டு முடிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன். பின் Bill தொகையை செலுத்திவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பினேன். 

குளித்து உடைமாற்றி அறைக்கு அருகிலிருந்த திறந்த குடிசையில் இளைப்பாறினேன். கடல்காற்று தென்னங் கீற்றுகளில் பட்டு குளுமையாக வீசியது. அந்த தங்குமிடத்தின் உதவியாளர் ஒருவரும் அதன் உரிமையாளர் 'காஸ்டெல்லோ' என்பவரும் உடனிருந்தனர். அவர்களிடம் உரையாடியதில் கோவாவை பற்றி நிறைய அறிந்துக்கொண்டேன். இரவு வரை அங்கேயே தங்குவதற்காக நானூறு ரூபாய் கூடுதலாக பணம் கொடுத்துவிட்டு் சிறிய BackBag மட்டும் மாட்டிக்கொண்டு ஊர்சுற்ற வாகனத்தை எடுத்தேன். 


வடக்கு நோக்கி கடற்கரை ஒட்டிய சாலையில் வண்டியை இயக்கினேன். ஓரிடத்தில் கரும்புச்சாரையும் பருகினேன். வாஸ்கோவிலிருக்கும் வானூர்த்தி நிலையம் அருகில் வரை சென்று திரும்பும்பொழுது வழிமாறி ஏதோவொரு தொழிற்சாலைக்குள் நுழைந்துவிட்டேன். அங்கிருந்த காவலர்கள் வழிமறித்து திருப்பியனுப்பினர். பின் வெல்சாவ் எனும் கடற்கரையில் நேரம் ஓட்டினேன்.



சுற்றிப்பார்க்க வேரேதும் இருக்கிறதா எனத் தேடுகையில் நீர் விளையாட்டுக்களிருக்கும் இடங்களை கூகுள் காட்டியது. உடனே பறந்தேன் பெடல்பேடிம் எனும் கடற்கரைக்கு. 
அந்த கடற்கரையில் சிறு குடிசையில் அமர்ந்திருந்த 'Frank watersports' குழுவினர் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்று அங்கிருக்கும் விளையாட்டுகளுக்கான விலைப்பட்டியலை நீட்டினர். 

Para sailing செய்வதாக என் விருப்பத்தை தெரிவித்து நான் கொண்டு வந்த பையை வைக்க Locker கேட்டேன். அந்த குடிசையில் இருந்த மேசையிலேயே வைத்துச் சென்று விளையாடிவிட்டு வந்து எடுத்துக்கொள்ளுமாறு பணித்தனர். என் walletஉம் கைப்பேசியும் அறிமுகமில்லாதவர்களிடத்தில் விட்டுச்செல்ல சற்றுத் தயங்கினேன். அந்த கடற்கரையில் எங்களையும் parasailing செய்ய காத்திருந்த 5 பேர்களையும் தவிற கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எவரும் இல்லை. 
என் தயக்கத்தை உணர்ந்து நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசி இசைவு பெற்றனர். நான் Para Sailing செய்வதை என் கைப்பேசியிலேயே கீழிருந்து படம்பிடிக்கவும் ஒருவரை அனுப்பி வைத்தனர். 

Para sailing balloonஐ இயக்குபவர் தயார்நிலையிலிருக்க நான் ஒடிச்சென்று ஏறிக்கொண்டேன். அது கட்டப்பட்டிருந்த படகு வேகமாக கிளம்ப parachute மேலெழும்பியது. மிகவும் பயமாக இருக்குமென எண்ணியிருந்தேன் ஆனால் ஒருதுளி அச்சமும் எழவில்லை ஆச்சர்யமும் ஆரவாரமும் மட்டுமே உணர்ந்தேன்.

கடல் மேல் உயரத்தில் பறந்துக்கொண்டே பார்த்த காட்சிகள் சிலிர்ப்படைய வைத்தது. தெற்கில் கோவாவின் நீண்ட கடற்கரை, வடக்கில் சிறு வளைகுடா போல் வளைந்து சென்ற கரைகள், அந்த வளைந்த கரைகள் ஒட்டியே அமைந்திருந்த மரங்கள் நிறைந்த சிறு குன்றுகள், குன்றுகளைத் தாண்டி வளைகுடாவின் முற்றத்தில் கரும்புகைகளை உமிழிக்கொண்டிருந்த தொழிற்சாலை என பலவற்றை ரசிக்க முடிந்தது. "அற்றைத் திங்களில் அன்றில் பறவையாய் ஓடி போலாம்" என்று இக்காட்சிகளைப் பார்த்துத்தான் எழுதியிருப்பார்கள் போல.

அன்றில் பறவையாக சில நிமிடங்கள் தான் நீடித்தேன். Parachuteஐ இயக்கியவர் மெதுவாக கீழிறக்கி கரையில் விட்டுவிட்டு அடுத்து காத்திருந்தவரை தூக்கி சென்றார். நான் அந்த குடிசைக்குச் சென்று BackBagஐ எடுத்துக்கொண்டு மீதி பணத்தைக் கேட்டேன். உடன் யாரும் வரவில்லையா என அவர்கள் கேட்க "Solo Traveler" என்றதும் கேள்விகள் பல அடுக்கினர். Bungee Jumping உட்பட என் பயண அனுபவங்களையும் அவர்களின் நிறுவனத்தைப் பற்றியும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். இறுதியாக Para Sailing மட்டும் போதாது Jetskiயும் அனுபவித்துச் செல்லுங்கள் என அன்பு கட்டளையிட்டனர். 

பணம் செலவழிப்பதில் எனக்கிருந்த தயக்கம் அவர்கள் காட்டிய அன்பாலும் கொடுத்த சிறு Discountஆலும் விலகியது. Jet skiயில் முறுக்கிக்கொண்டு கடலலைகளின் மேல் சீறிப்பாய்ந்தேன். உடல்முழுதும் உப்புத்தண்ணீரில் நனைந்து கரை திரும்பினேன். அந்த குழுவிடம் நன்றி கூறி விடைப்பெற்றேன்.

மணி மாலை நான்கை நெருங்க பசியில் நனைந்த உடைகளிலேயே உணவகம் தேடி சுற்றினேன். பல்லை இளிக்கும் பங்குனி வெயிலில் உடையில் இருந்த ஈரம் இன்னும் சில நேரம் இருக்கலாம் என ஆசைக்கொள்ளும் முன்னே சட்டையெல்லாம் உலர்ந்து பின் வியர்வையில் நனைந்தது. உள்ளூர் உணவை முயர்ச்சிக்க எண்ணி சிறிய உணவகம் ஒன்றில் நுழைந்து 'Goan Thali' ஒன்றை order செய்தேன். சில நொடிகளிலேயே எடுத்து வந்து வைத்தார்கள். வட்டமான தட்டில் இருந்தவை சோறு, காரக்குழம்பு, ரசம் ,அவரைக்காய் பொறியல்,பொறித்த மீன், ஊறுகாய் ,அப்பளம். மற்றவை அனைத்தும் நம்மூர் Meals போன்றே இருந்தாலும் மீன் மட்டும் தனித்த சுவை. வழக்கமான வகையில் பொறிக்காமல் மேலே இருந்த மசாலா தனித்தன்மையான ருசியைக் கொடுத்தது. ரசத்தில் புளி அதிகமாக உறைத்து பற்களை கூசச் செய்தது. வயிறு நிறைந்த நிலையில் அறைக்குத் திரும்பினேன். 

இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு கொடுத்தவர் கைப்பேசியில் அழைத்து வண்டியை அன்றே திரும்ப விடுவதென்றால் ஐந்தரை மணிக்குள் விடச்சொல்லி பணித்தார். இல்லையென்றால் அடுத்த நாளில் விடுமாறு கூறினார். இன்றே வருவதாகக் கூறி குளித்துவிட்டு தயார் ஆனேன். அறையில் ஆங்காங்கே வீசபட்டிருந்த துணிகளை எல்லாம் பொறுக்கி பைக்குள் திணித்து ஏதும் விட்டுச்செல்லவில்லை என்பதை உறுதி செய்தபின் வெளியேறினேன். 

அறையை பூட்டி சாவியை கொடுக்க உதவியாளரைத் தேடினேன். அவர் இல்லாததால் காஸ்டெல்லோவைத் தொடர்புக்கொண்டேன். பூட்டுச்சாவியை அறையிலேயே வைத்துவிட்டு பூட்டாமல் செல்லுமாறு அறிவுருத்தினார். அவரிடம் நன்றி கூறிவிட்டு அறைக்கு முன் சில selfieகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். 

விடுமுறை முடிந்து பள்ளிச்செல்லும் சிறாரிடம் இருக்கும் துயரத்தை ஒத்த உணர்வுடன் கோவாவின் மாலை நேரச்சாலையில் பயணித்தேன்.  
மணி ஐந்தே முக்காலுக்கு வாகனத்தை ஒப்படைத்துவிட்டு ஆதார் அட்டையையும் முன்பணத்தில் மீதியிருந்த ஆயிரம் ரூபாயையும் பெற்றுக்கொண்டேன்.

அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டரில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு நடந்தே சென்றேன். முகத்திலும் மனதிலும் வெறுமை. ஒரு குல்ஃபி வாங்கி சுவைத்துக்கொண்டே ரயில் நிலைய தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றேன். இரவு பதினொன்றரை மணிக்குத்தான் ரயில். அதுவரை அருகில் ஊர்சுற்றலாம் என சிறிய Backbagஐ மட்டும் தனியே எடுத்துக்கொண்டு கணத்த Traveler Backbagஐ cloak roomல் வைக்கச்சென்றேன். 

அங்கு இருந்தவர் பூட்டில்லாத பைகள் எடுத்துக்கொள்ளப்படாது என இந்தியில் கூறிவிட்டு சில பேச்சுவார்த்தைக்குப் பின் பட்டையான Strapல் பையை கட்டி சீல் வைத்து எடுத்துக்கொண்டார். ரசீது எழுதி கொடுக்க அடையாள அட்டையை இந்தியிலேயே கேட்க எனது ஆதாரை நீட்டினேன். 

ஆங்கிலத்தில் என் பெயரை ஒவ்வொரு எழுத்தாக ஆதாரில் பார்த்து பார்த்து பதிவேட்டில் வரைந்துக்கொண்டிருந்தார். அவரின் மெத்தனப்போக்கும் கடுகடுப்பும் என் பொறுமையை நன்கு அசைத்துப்பார்த்தது. பின் ரசீது வாங்கி ரயில் நிலையத்தின் வடக்குப்பக்கம் வெளியேறும்பொழுது மணி ஏழை நெருங்கியிருந்தது. இரண்டு கி.மீ. தொலைவில் ஒரு பூங்கா இருப்பதை கூகுளில் அறிந்து அதை நோக்கி நடை போட்டேன். 

பூங்காவைச்சுற்றி பல தெருக்கள் சந்துகளில் ஏராளமாக கடைகளும் மக்கள் கூட்டமும் சேர்ந்து திருவிழா போல் இருந்தது. ஒவ்வொரு சந்திலும் நுழைந்து கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். ஒரு கடையில் கோவாவின் ஞாபகமாக Souvenir இரண்டு வாங்கிக் கொண்டேன். மார்கோவா மார்க்கெட்டை சுற்றிப்பார்த்தே இரண்டு மணி நேரத்தை ஓட்டிவிட்டேன். 

அதன்பின் பூங்காவின் கதவுகள் பூட்டியிருந்ததால் அதைச்சுற்றி போடப்பட்டிருந்த இருக்கைகளுள் ஒன்றில் அமர்ந்து இளைப்பாறினேன். கைப்பேசி எடுத்து social mediaக்களில் உலாவிக்கொண்டிருக்கும்பொழுது அக்காவிடமிருந்து WhatsApp call வந்தது. நான் கோவாவிலிருப்பது அதுவரை வீட்டிற்கு தெரியாது. 



அக்காவிடம் அனைத்தையும் விளக்கி ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். மணி பத்தரையை தாண்டியதும் சாலையோரமிருந்த கடையில் Falooda குடித்துவிட்டு ரயில் நிலையத்திற்கு நடந்தேன். போகும் வழி முழுக்க மதுபானக் கடைகள் நிரைய இருந்தன. இங்கு விலை மலிவு என்பதால் நண்பர்களுக்காக ஒரு ஒயின்(Red Wine) பாட்டிலை வாங்கிக் கொண்டேன். 

நேரே Cloak room சென்று பையை திரும்ப எடுக்கையில் அதே நபரின் அதே மெத்தனம் கடுஞ்சினத்தையே உருவாக்கியது. 57 ரூயாய் கட்டணத்திற்கு 100 ரூபாயை நீட்டினேன். நூறில் ஐம்பத்தேழு போக மீதி எவ்வளவு என கால்குலேட்டரில் கணக்கிட்ட பிறகே சில்லரையை எடுத்துக்கொடுத்தார். 

நீண்ட பொறுமையான போராட்டத்திற்கு பிறகு என் Back Bagஐ பெற்றுக்கொண்டு முதலாம் நடைமேடையிலேயே அமர்ந்திருந்தேன். அருகில் மது போதையில் ஒருவர் வந்தமர்ந்து என்னிடம் பேச்சு கொடுத்தார். கன்னடத்தில் அவர் பேசுவதைக் கானொலியாக பதிவு செய்ய வேண்டினார். அவரின் தத்துவங்களை நான் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரை வைரல் ஆக்க வேண்டுமாம். அவர் ஏதேதோ ஸ்லோகங்களை உளறிக்கொட்டிக்கொண்டிருக்க ரயிலின் அறிவிப்பு வருவதை காரணம் காட்டி அவரிடமிருந்து நழுவி விட்டு இரண்டாம் நடைமேடைக்கு சென்றேன். 

சரியான நேரத்தில் ரயில் வந்ததும் ஏறி அமர்ந்தேன். இதிலும் Lower Berth தான். எதிரே ஒரு வயதானவர். அருகிலிருந்த இருக்கைகளில் இளைஞர்கள். ரயில் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே படுக்கைகளை கீழிறக்கி விளக்குகளை அணைத்தனர். நள்ளிரவில் மலைபாதையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. 

தூத்சாகர் நீர்வீழ்ச்சியைக்காண அலாரம் வைத்து பாடல்களை கேட்டுக்கொண்டே உறங்கினேன் இருந்தும் தவறவிட்டேன். பார்த்திருந்தாலும் இரவில் ஒன்றும் தெரிந்திருக்காது என ஆறுதலடைந்தேன். 

09 ஏப்ரல் 2024 - செவ்வாய்


அதிகாலையில் மலைப்பாதையை கடந்த பின் ரயில் வேகமெடுத்தது. முழுதாக தூக்கம் தெளிந்ததால் எழுந்து பல் துலக்கி முகங்கழுவினேன்.விடியும் வேளையில் Footboardல் நின்று இன்னிசை கேட்டுக்கொண்டே ரயில் கடக்கும் சம வெளிகளை வேடிக்கை பார்த்தேன்.

பெங்களூரிலிந்து சென்னைக்கு மதியம் இரண்டரை மணிக்கு புறப்படும் double decker ரயிலில் premium tatkalல் முன்பதிவு செய்தேன். இந்த பயணத்தில் ரயில்கள் மட்டும் இல்லையென்றால் என் செலவுகள் விண்ணைமுட்டியிருக்கும். ஹூப்லி ரயில் நிலையம் வந்ததும் இறங்கி தேநீர் குடித்தேன். ஒருமணி நேரம் கழித்து ரயிலில் விற்ற தட்டு இட்லியை வாங்கி சாப்பிட்டேன்.

இளையாராஜா மட்டுமே துணையாக அந்த அரை நாள் பயணத்தை ஓட்டினேன். டுமக்கூர் ரயில் நிலையத்தை தாண்டியதும் ரயில் பெட்டியில் சலசலப்பு ஏற்படுவதை கேட்டு எட்டிப்பார்த்தேன். காவல் துறையினர் மோப்ப நாய்களைக்கொண்டு தேர்தல் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். எனக்கும் சிறு பதற்றம் தொற்றிக்கொண்டது. கோவாவில் வாங்கிய ஒயின் பாட்டில் பையில் இருந்ததால் பறிமுதல் செய்யப்படுமோ என அச்சம்.

ஒவ்வொருவரின் பைகளையும் துழாவிய பெண் காவலர் ஒருவர் என்னிடம் வந்து என் பையையும் திறக்கக் கேட்டார். பதற்றத்தை வெளிக்காட்டாமல் பையை திறந்து பாட்டில் இருந்த சின்ன BackBagல் காலணிகள் இருப்பதாகக் கூறி தனியே எடுத்துவிட்டு மற்றதைக் காட்டினேன். பைக்குள் கைவிட்டு சோதித்துவிட்டுச்செல்ல நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

மதியம் பன்னிரண்டரை மணிக்கு யஸ்வந்த்பூர் வந்தடைந்தேன். ரயிலிலிருந்து இறங்கி KSR சந்திப்பிற்கு மெட்ரோவில் செல்ல 'நம்ம மெட்ரோ' செயலியில் பதிவு செய்து மெட்ரோ ரயில் நிலையம் சென்றேன். Scanner கருவியில் என்னுடைய பையில் மது இருப்பதைக்கண்டு அனுமதிக்க மறுத்தனர். சற்று அவமானமாகவே இருந்தது. 

பின் 12:30க்கு வரவேண்டிய புறநகர் MEMU ரயில் ஒன்று அரை மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருப்பதை அறிந்து பத்து ரூபாய்க்கு டிக்கட் எடுத்து அதற்கான நடைமேடை சென்று காத்திருந்தேன். 

ஒன்றரை மணிக்கு KSR சந்திப்பை அடைந்தேன்.அங்கு காத்திருப்பு அறையிலிருந்த ஒப்பனை அறை சென்று முகங்கழுவி உடைகளை மாற்றிக்கொண்டேன். பின் Mazza,Good day packetஐ வாங்கிக் கொண்டு ஆறாவது நடைமேடையில் நின்றுக்கொண்டிருந்த ரயிலில் D3ல் ஏறினேன். 

Middle Seatல் இருந்த என்னை கிருஷ்ணராஜபுரத்தில் ஏறிய குடும்பத்தினர் எதிர்பக்கம் இருந்த ஜன்னல் இருக்கையை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டனர்.கரும்பு தின்ன கூலியா என ஜன்னலோரம் அமர்ந்து பாடல்களை Spotify Queueல் அடுக்கினேன். 

கேட்டுக்கொண்டிருந்த பாடலை அடிக்கடி நிறுத்தி அருகிலிருந்த குடும்பத்தினரிடமும் உரையாடினேன். கணவன் மனைவி ஒரு சிறுவன் ஒரு சிறுமி என Template ஆன குடும்பம், வேலூரை சார்ந்தவர்கள். நான் சென்னைக்குச் செல்கிறேன் எனக்கூறியதும் அந்த சிறுவன் கேட்டான் "விஜய் இருப்பாரே அந்த ஊரா நீங்க" என்று. த.வெ.க. வின் விஜய் பிற்காலத்தில் ஆட்சியை பிடித்துவிடுவார் போல.

பங்காருபெட்டைக் கடந்ததும் ரயில் பெட்டியில் கூட்டம் அதிகரித்தது முன்பதிவு செய்யாத பலரும் நின்றுக்கொண்டே பயணித்தனர். கோடையின் அனலில் அந்த பயணம் என்னை மிகவும் சோர்வடையச் செய்தது.

காலம் முன்னிரவானது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்த தோழிக்கு அவளுக்காக வாங்கிய Souvenir ஒன்றை கொடுத்துவிட்டுக் கடந்தேன்.

ரயில் சற்று தாமதமாக ஒன்பது மணிக்கு சென்ட்ரலை அடைந்தது. சென்ட்ரலுக்கு முன்பு நின்றிருந்த பேருந்தில் ஏறி சைதாப்பேட்டையில் இறங்கினேன். அங்கே 19ஆம் எண் பேருந்திற்காக வெகுநேரம் கால்கடுக்க நின்றும் ஒரு பயனும்மில்லை. 

வேறுவழியின்று திருவான்மியூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். கடும் கூட்ட நெரிசலில் கணத்த பையை மாட்டிய படியே பயணித்தேன். வேளச்சேரி வழியாக சென்றதால் SRP Tools நிறுத்தத்தில் இறங்கி OMR ல் மறுப்பக்கம் சென்று பெரும்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறினேன். சில தூரம் சென்றதும் முன்னே 570 எண் பேருந்து செல்வதைக் கண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி ஓடி மாறினேன். 

பரபரப்பாக பயணித்து நள்ளிரவைக் கடந்து ஒரு மணிக்கு படூரை அடைந்தேன். 24மணி நேரமும் இயங்கும் 'Eat nd Drinks' எனும் கடையில் Chicken sandwichஉம் தர்பூசணி பழச்சாறும் குடித்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன்

ஆட்கள் நடமாட்டமே இல்லாத சாலையில் கால் வலியுடன் மெதுவாக நடந்து சென்ற எனக்கு வழித்துணையாக இளையராஜாவை அழைத்தேன். 

"இதயம் ஒரு கோவில்... 
  அதில் உதயம் ஒரு பாடல்"
என 

இராஜாவின் குரலில் இராஜாவின் இசையை மலராய் எனக்கு சூட்டிக்கொண்டிருக்க வீட்டை நெருங்கினேன். 

என் அடுக்குமாடியின் வாயிலில் நுழைய, பாதுகாவலர் அண்ணனின் வணக்கத்திற்கு நானும் சிரித்துக்கொண்டே வணக்கம் தெரிவிக்க, என்னை வாழ்தினார் இராஜா.

"வாழ்க என்றும் வளமுடன்...
  என்றும் வாழ்கவே...!!"


(Reference Video Credits: Noise and Grains Youtube Channel. Link: https://www.youtube.com/watch?v=TaYPR9PvKDw)